பெண்ணுறுப்பு புற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்கும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்

Jul 02, 2024

பெண்ணுறுப்பு புற்றுநோய்கள்பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கும் புற்றுநோய்க் கட்டிகள் பெண்ணுறுப்பு புற்றுநோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. கர்ப்பப்பைவாய் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், யோனி புற்றுநோய், கருமுட்டை புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் ஃபலோபியன் குழாய் புற்றுநோய் என்று 6 முக்கிய வகை பெண்ணுறுப்பு புற்றுநோய்கள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணுறுப்பு புற்றுநோயும் தனித்துவமானது, மேலும் அவை வெவ்வேறு அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் மற்றும் தடுப்பு உத்திகள் கொண்டவை. பெண்ணாகப் பிறந்த அனைவருக்கும் பெண்ணுறுப்பு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றாலும், வயதாக ஆக இதற்கான அபாயம் அதிகரிக்கிறது. பெரும்பாலான புற்றுநோய்களைப் போலவே, பயனுள்ள சிகிச்சை மற்றும் நல்ல நீண்டகால விளைவுகளைப் பெற, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமாகும். 

 

பெண்ணுறுப்பு புற்றுநோய்களை முழுமையாகத் தடுக்க முடியாது என்றாலும், அதற்கான ஆபத்தை கணிசமாகக் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உள்ளன. இவற்றை நம் வாழ்க்கைமுறையில் ஒருங்கிணைத்துக் கொண்டால், நல்ல பயன் பெறலாம். 

1. வழக்கமாக முறையான புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பெண்ணுறுப்பு பரிசோதனைகள் - முறையான பரிசோதனைகள் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டால், ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்து விடலாம். பெண்கள் 21 வயதில் “பாப் ஸ்மியர்” பரிசோதனை செய்து கொள்ளத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 3 வருடங்களுக்கு ஒரு முறை பின்தொடர்தல் பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். உங்கள் வருடாந்திர உடல்நலப் பரிசோதனையில் இடுப்பு (“பெல்விக்”) பரிசோதனைகள் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டால், ஏதேனும் அசாதாரண நிலை இருந்தால் அதை முன்கூட்டியே கண்டறிய இது உதவும். உங்கள் குடும்ப உடல்நல வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தில் பெண்ணுறுப்பு புற்றுநோய்க்கான வரலாறு இருந்தால், அதை உங்கள் மகளிர்-நல மருத்துவரிடம் தெரிவிக்கவும். பெண்ணுறுப்பு புற்றுநோய்களுக்கான குடும்ப வரலாறு உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டிருக்கலாம். 

2. நோயைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - பெண்ணுறுப்பு புற்றுநோய்களைப் பற்றி தெரிந்து கொள்வது பயம் ஏற்படுத்தலாம், ஆனாலும் அதைப் பற்றி படியுங்கள் மற்றும் உங்கள் மகளிர்-நல மருத்துவருடன் பேசுங்கள். நீங்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகளான அசாதாரண யோனி இரத்தப்போக்கு, இடுப்பு வலி போன்றவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனமாக பராமரிக்கவும், அப்போது தான் ஏதேனும் கோளாறுகள் இருப்பதற்கான முதல் அறிகுறி தோன்றிய உடனே நீங்கள் மருத்துவ உதவியை நாடலாம். ​

3. HPV தடுப்பூசியைப் பெறுங்கள் - மனித பாப்பிலோமா வைரஸ் (“HPV”) என்பது மொத்தம் சுமார் 150 வைரஸ் திரிபுகளின் தொகுப்பாகும். இது பொதுவாக பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரையும் இது பாதிக்கலாம். வைரஸின் சில திரிபுகள் லேசானவை, அவை பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் தோல் அசாதாரணங்களை ஏற்படுத்துகின்றன. மிகவும் ஆபத்தான திரிபுகள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடும். ஒரு நபர் பாலியல்-ரீதியாக துடிப்புடன் செயல்படத் தொடங்கும் முன் இந்தத் தடுப்பூசி போடுவது சிறந்தது. உங்கள் வயது மற்றும் பொதுவான ஆரோக்கியத்திற்கு ஏற்ற சரியான மருந்தளவை உங்கள் மகளிர்-நல மருத்துவர் பரிந்துரைப்பார். 

4. புகைபிடிப்பதைத் தவிர்க்கவும் - பெண்ணுறுப்பு புற்றுநோய் உட்பட, பல வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை புகைபிடித்தல் அதிகரிக்கிறது. புகையை சுவாசிப்பதை (“செகண்ட்-ஹேண்ட் ஸ்மோக்”) தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனென்றால் உண்மையில் புகைபிடிப்பதைப் போல அதே அளவு தீங்கை இதுவும் விளைவிக்கும். 

5. ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் எடையை பராமரித்தல் - சுத்தமான, சரிவிகித உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகிய பழக்கங்கள் புற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தால் அது உடலின் ஹார்மோன் அளவுகளை சரியாகப் பராமரிக்க உதவும், அத்துடன் அழற்சியைக் குறைக்கவும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை தடுக்கவும் உதவும். உடல் பருமன் அதிகரித்தால் அது நாட்பட்ட அழற்சியை ஏற்படுத்தக்கூடும், அதன் விளைவாக செல் டிஎன்ஏ-வுக்கு சேதம் ஏற்படலாம் மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கான அபாயம் அதிகரிக்கலாம். அதிகப்படியான உடல் கொழுப்பு நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் பாதிக்கலாம், இதன் விளைவாக நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான உங்கள் உடலின் திறன் குறைகிறது. 

6. பாதுகாப்பாக உடலுறவு கொள்ளவும் - பாதுகாப்பாக உடலுறவு கொள்ளுதல் (ஆண் அல்லது பெண் ஆணுறைகள் போன்றவற்றை பயன்படுத்துதல்) மற்றும் பல்வேறு பாலியல் துணைவர்கள் கொண்டிருப்பதை தவிர்த்தல் ஆகியவை “HPV” மற்றும் பிற பாலியல் நோய்களுக்கான அபாயத்தை குறைப்பதுடன், அதன் விளைவாக ஏற்படக்கூடிய பெண்ணுறுப்பு புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. 

7. வளர்சிதைமாற்ற ஆரோக்கியத்தை (“மெட்டபாலிஸம்”) நன்கு பராமரிக்கவும் - உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (“பிசிஓஎஸ்”) போன்ற வளர்சிதைமாற்ற நிலைமைகள் இருந்தால் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் பெண்ணுறுப்பு புற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்க அது மிகவும் முக்கியம். நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்; இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து-நிறைந்த உணவை உண்ண வேண்டும்; பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்து-நிறைந்த மற்றும் சர்க்கரை-நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; இந்த உணவுப் பழக்கத்தை தவறாமல் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வளர்சிதைமாற்றம் நன்றாக இருந்தால், உயிரணு வளர்ச்சி மற்றும் உயிரணு பிரிவைக் கட்டுப்படுத்த அது உதவுகிறது, இதனால் புற்றுநோய் வளர்ச்சிக்கான அபாயம் குறைகிறது. 

8. HRT-இன் அபாயங்களைப் பற்றி உங்கள் மகளிர்-நல மருத்துவருடன் விவாதிக்கவும் - மாதவிடாய் நிற்கும் காலத்தில், பல பெண்களுக்கு உடல் சூடாகுதல் (“ஹாட் ஃப்ளாஷ்”), இரவில் வியர்த்தல், யோனி வறட்சி மற்றும் அழற்சி, சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல் (யுடிஐ) மற்றும் தூங்குவதில் சிரமம் போன்ற துன்பகரமான அறிகுறிகள் ஏற்படலாம். இந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்த சில பெண்களுக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், HRT உங்களுக்கு பெண்ணுறுப்பு புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம், குறிப்பாக நீண்ட காலத்திற்கு HRT பயன்படுத்தப்படும் போது. உங்கள் மகளிர்-நல மருத்துவரிடம் இதைப் பற்றி விவாதித்து, HRT-இன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளைக் கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். உங்கள் மகளிர்-நல மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் ஈஸ்ட்ரோஜன் கிரீம்கள் அல்லது மேற்பூச்சு ஜெல்களைப் பயன்படுத்த வேண்டாம். 

9. ஹார்மோனை சீர்குலைக்கும் இரசாயனங்களைத் தவிர்க்கவும் – இன்றுள்ள நுகர்வோர்-மயமான உலகில், என்டோக்ரைன் சுரப்பிகளை சீர்குலைக்கும் இரசாயனங்களைத் தவிர்ப்பது மிகவும் சிரமம் என்றாலும், அதைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். ஒருமுறை-மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்க்கவும். தேலேட்-இல்லாத, பாராபென்-இல்லாத மற்றும் பிபிஏ-இல்லாத அழகு மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த முயற்சிக்கவும். நறுமணம் கொண்ட தயாரிப்புகளைத் தவிர்த்து, வாசனை-இல்லாத திரவங்களை தேர்வு செய்யவும். நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களையும் தவிர்க்க வேண்டும். இயற்கையான துப்புரவுப் பொருட்களுக்கு மாற முயற்சிக்கவும், குறிப்பாக துணி துவைக்கும் பொருட்கள் மற்றும் சமையலறை கிளீனர்கள். என்டோக்ரைன் சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள் உங்கள் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கருவுறுதல், வளர்சிதை மாற்றம் மற்றும் தூக்கத்தையும் பாதிக்கின்றன. 

 

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved